மனம் vs புத்தி vs அறிவு vs நம்பிக்கை | The God of Ultimate

மனம் vs புத்தி vs அறிவு vs நம்பிக்கை |  The God of Ultimate 

மனம், புத்தி, அறிவு, நம்பிக்கை இவையனைத்தும் நம் மூளையின் மெய்நிகர் பகுதிகள். அதாவது ஒரு மருத்துவர் மூளை அறுவை சிகிச்சை செய்கிறாரென்றால், அவரால் கண்ணால் இப்பகுதிகளை காண இயலாது. ஆனால் இதை உணரலாம்.

இவைகளின் அர்த்தம் யாது?



மனம்:
மனம் என்பது வேறெதுவும் அல்ல, அது நாம் அடையும் அனுபவங்களின் தொகுப்பு. பிறந்த குழந்தையின் மனமும், வயது முதிர்ந்தவரின் மனமும் ஒன்றாக இருக்குமா? முதலில் பிறந்த குழந்தைக்கு மனம் உண்டா ? நிச்சயம் உண்டு. ஒரு கரு உருவாகும்போதே அது அனுபவம் அடையதுவங்குகிறது. பிறந்தவுடன் கண்களால் பார்ப்பது, காதால் கேட்பது, தொடு உணர்வினால் அடையும் அனுபவம், இவ்வாறாக ஐம்புலன்களாலும் மனம் தினம் தினம் அனுபவம் கொள்கிறது. ஒருவர் தூங்கும்போதும் மனம் அனுபவமடைகிறது. இவ்வாறாக அனைத்து அனுபவங்கள் திரண்ட நிலையே மனமாக மாறுகிறது. இதில் நல்லவைகளும் அடங்கும், தீயவைகளும் அடங்கும். இது ஒரு குவியல் போல. உங்களால் இந்நிகழ்வை நிறுத்த முடியாது. ஆனால் அதை கட்டுப்படுத்தலாம். அது சற்று கடினம்தான்.

புத்தி:
நம் மனதில் விளைபவைகளை புத்தி உபயோகப்படுத்தி கொள்கிறது. சில நிகழ்வுகளையும் ஒன்றினைத்தும் அதன் விளைவுகளையும் பயன்படுத்தி மற்றும் யோசித்து சில முடிவுகளை எடுக்கிறது. ஆனால் அச்சமயம் மனம் சில முடிவுகளைக்கூறும். அதாவது இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மனம் உள்ளதை உள்ளவாறே கூறும். புத்தி புதிதாக உருவாக்கும். இதை கற்பனை என்றும் கூறலாம். சில சமயம் மனம் சொல்வதை கேட்பதும், சில சமயம் அதன் போக்கில் போகாமல் யோசித்து பார்ப்பதும் நலம்.

அறிவு:
புத்தி எடுக்கும் முடிவுகளே, ஒரு மனிதனின் அறிவாக பரிணமிக்கிறது. மனதில் உள்ள நல்லவைகள் மற்றும் தீயவைகள் இவற்றை அறிதலே அறிவாகும். நல்லவை, தீயவை அறிவது மனிதருக்கு மனிதர் மாறுபடும். இதுவே ஒருவரின் செயல்களை தீர்மானிக்கும்.

நம்பிக்கை:
மனதில் உள்ள நிகழ்வுகளும் அதன் முடிவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தாக்கத்தின் முதிர்ச்சியே நம்பிக்கையாக மாறுகிறது. அத்தாக்கத்தை ஆதாரம் என்றும் கூறலாம். இத்தாக்கம் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் பரவலாம். நம்பிக்கை என்பது நிச்சயம் ஒரு ஆதாரத்தை கொண்டிருக்கும். எவ்வித ஆதாரமும் இல்லாமல் கொண்டிருக்கும் நம்பிக்கை மூட நம்பிக்கையாகும்.


ஒரு வேலை நம் மனதில் தவறான எண்ணங்கள் சேர்வதினால், புத்தி நாசமடைகிறது. அறிவு கெடுகிறது. மூட நம்பிக்கை நம்மை தொடருகிறது, அதை கிழித்தெறிய முடியாது கடைசியில் அதனுள் கட்டுண்டு கிடக்கவேண்டிய நிலைமை நேர்கிறது.

மனதில் பதியும் அனுபவங்கள் அல்லது எண்ணங்கள், இது நல்லது மற்றும் இது தீயது என்று சரியாக ஒழுங்கு படுத்தினால் நிச்சயம் மனம் செம்மை அடைந்து வாழ்வு சிறக்கும்.


எவ்வாறு மனதை ஒழுங்கு படுத்துவது?

அதை துவங்குவதற்கு முன்பு முதலில் அடையும் அனுபவங்களை கட்டுபடுத்த வேண்டும். அதாவது ஐம்புலன்களின் உணர்வுகளை நிராகரிக்க வேண்டும். அணைத்து புலன்களையும் மூடி, புத்தியையும் நிறுத்தினால், மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிறகு மனதை ஒழுங்கு படுத்தலாம். இதன் பெயரே தியானம் ஆகும்.

எபோதும் நாம் நம் மனதில் உள்ளவற்றை கொண்டே நம்மையும் பிறரையும் அறிகிறோம். அதாவது மனம் இறந்த கால நிகழ்வை கொண்டு அமைகிறது, ஆனால் புத்தி எதிர்காலத்தை எண்ணி சிந்திக்கிறது.
ஒரு வேலை அறியாமை என்னும் இருள் நம்மை ஆட்கொண்டால், மனம் இறந்த காலத்தை நினைத்து ஏங்கும், புத்தி எதிர்காலத்தை நினத்து பயம் கொள்ளும். அறியாமையை நீக்கும் அருமருந்து ஞானம்.

அனைத்திற்குமான விடைகளை தேடி அறிவதே ஞானத்தின் பயணம். சுய சிந்தனையே தேடுதலை தூண்டும் சாவி.

அனைத்திற்கும் காரணமான மனதையே நீங்கள் மறக்கமுடியுமானால், அதாவது மனதைக்கொண்டு நம்மை அறியாமல், அந்த மனமும் நான் இல்லை என்ற உணர்தலின் இறுதில் ஆன்ம தரிசனத்தை காணப்பெறலாம்.


அதுவே கடவுள் நிலை

Post a Comment

أحدث أقدم